சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான  ஊட்டி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு  அங்கு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்ததால், ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. இதனால், கொள்ளை, கொலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை, வழக்கு, வாக்குமூலம் என அதகளப்பட்டது.  இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயானிடம் நடத்தப்பட்ட மேல் விசாரணையின் போது, அதிமுக பிரமுகர்கள் பெயர் அடிபட்டதாக தகவல்கள் வெளியானது. முக்கிய குற்றவாளயின சயானிடம் மீண்டும் பெறப்பட்ட வாக்குமூலம்  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக மூத்த தலைவர்கள் கதிகலங்கி, அலறத் தொடங்கி உள்ளனர். விசாரணைக்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியான நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் கொடநாடு கொலை, கொள்ளை  தொடர்பான வழக்கு இன்று (செப்டம்பர் 2) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவல்துறை இன்று புதிதாக பெற்ற வாக்குமூலங்களைக்கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இன்றைய வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.