சென்னை

மிழக பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வல தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் சுகாதாரத்துறை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே இடத்தில் பலர் கூட தடை விதித்துள்ளது.   அதன் அடிப்படையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் தடை விதித்துள்ளது.

ஆனால் தமிழக பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி  ஊர்வலத் தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா, “விநாயக சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தமிழக அரசு விதித்துள்ள தடை இந்துக்களுக்கு எதிரானதாகும்.  மற்ற மதத்தவரின் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை தடை செய்யாத முதல்வர் மு க ஸ்டாலின் இந்து மத ஊர்வலங்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜாவின் குரலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் எதிரொலித்துள்ளார். அவர், “ஒரு பண்டிகை கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.  ஆனால் முழுவதுமாக தடை விதிப்பது யாராலும் ஒப்புக கொள்ள முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அரசு உத்தரவை மீறி சிலைகள் வைக்க உள்ளதாகவும் இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் ஒருவர், “மத்திய அரசின் உத்தரவுப்படி விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படியானால் மத்திய பாஜக அரசை தமிழக பாஜக  எதிர்க்கிறதா?  இதே உத்தரவு பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சியிலும் விநாயக சதுர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்டிருந்தது” எனக் கூறி உள்ளார்.