சென்னை

புது வாகனங்களுக்கு முழுமையாக பம்பர் டு பம்பர் முறையில் முழு காப்பீடு செய்வது கட்டாயம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தற்போது போக்குவரத்து சட்டம் மாற்றப்பட்டதால் பல புதிய விதிகள் அரசால் இணைக்கப்பட்டுள்ளன.  அவ்வகையில் வாகனங்களுக்கு முழு காப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   சென்னை உயர்நீதிமன்றமும் இது குறித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன் அடிப்படையில் போக்குவரத்து துணை ஆணையர் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் , ”இந்த மாதம் அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிதாக விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் முறையில் காப்பீடு செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் ஓட்டுநர், பயணியர், வாகன உரிமையாளர் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்குக் காப்பீடு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வாகனப் பதிவில் ஈடுபடும் அனைவரும் கட்டாயமாக இந்த உத்தரவினை கடைப்பிடிக்க வேண்டும்.  இது தொடர்பான அறிவுறுத்தல்களைக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் வாகன வினியோகஸ்தர்களுக்கும் வழங்க வேண்டும்.  வாகனப் பதிவின்போது காப்பீட்டுச் சான்று, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளதா என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சரி பார்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.