சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக  புதிய நீதிபதியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான ஊட்டி கோடநாடு எஸ்டேட்டில் ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அங்கு  கொலை கொள்ளை நடைபெற்றது. இந்த கொள்ளை, கொலையை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் இதில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக, ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படையினர் ஏப்.,21, 22ம் தேதிகளில், சென்னையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். கோடநாடு பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்கள், கட்சியினரிடம் எழுதி வாங்கிய கடித நகல்களின் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது கோடநாடு பங்களாவில் பணியாற்றிய மேலாளர், சமையலர், காவலாளிகள், கார் டிரைவர்களை பணிக்கு பரிந்துரை செய்தவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இதில், பெரும்பாலானோர், கோவை, ஈரோடு, சேலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முதல்கட்டமாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.  கடந்த 2017 ஏப்., 24ல் கொள்ளை நடந்த நாளில், அங்கு பணியில் இருந்தவர்களின் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசியவர்களின் பட்டியல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று திடீரென கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா  பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக  புதிய நீதிபதியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.