திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களிடையே வாக்குகளை பெறும் நோக்கில் கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகள் பணமும், இலவச பொருட்களையும் வழங்கி வருகின்றன. அதன்படி, திருச்சியில், திமுக வேட்பாளர் கே.என்.நேரு பெயரிலான கவரில் காவல்துறையினருக்கு அன்பளிப்பு கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 6 காவல்துறையினர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில், திமுக வழக்கறிஞர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு போட்டியிடுகிறார். திருச்சி மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அடங்கிய 12 கவர்களும், தில்லை நகர் காவல் நிலைத்திற்கு 24 கவர்களும் டெலிவரி செய்யப்பட்டன. இந்தக் கவர்கள் கே.என்.நேரு சார்பில் வழங்கப்பட்டதாக தகவல்கள் பரவின. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் வேகமாகப் பரவியது. காவலர்களுக்கு, திமுகவினர் வழங்கும் அன்பளிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் வகையில் கவர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறை ஆணையர், தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தியது. இரு காவல் நிலையங்களிலும் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கே.என்.நேரு இந்த பணப்பட்டுவாடாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை ”என் பெயரை களங்கப்படுத்தி தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது என என்று தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு அனுப்பினார்
மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் இச்சம்பவம் தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சிவக்குமார், தில்லைநகர் தலைமை காவலர் சுகந்தி, அரசு மருத்துவமனை காவல்நிலைய சிறப்பு சார் ஆய்வாளர் பாலாஜி, நுண்ணறிவு பிரிவு காவலர் சங்கரன், கலியமூர்த்தி, செல்வா உள்ளிட்ட ஆறு பேரை சஸ்பென்ட் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திமுக வழக்கறிஞர் பாரதி மணிவண்ணன், பாலாஜி, சுகந்தி ஆகியோர் மீது மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.