காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்து அக்டோபர் 26 வுடன் 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காஷ்மீரின் இன்றைய நிலைக்கு முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளே காரணம் என்று பேசினார்.

படங்கள் நன்றி ‘தி வயர்’

கிரண் ரிஜிஜூ பேசியதாவது :

      • காஷ்மீர் ராஜா ஹரி சிங் முதன் முதலாக 1947 ம் ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது அதற்கு வேறு சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி ராஜாவின் கோரிக்கைகளை நேரு நிராகரித்தார்.
      • 1947 ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்கு படையெடுக்க துவங்கிய நிலையிலும் நேரு இதுகுறித்து எந்த கவனமும் செலுத்தாமல் இருந்தார்.
      • அக்டோபர் 21 ம் தேதி காஷ்மீர் பிரதமர் மூலம் மன்னர் ஹரி சிங்குக்கு நேரு எழுதிய கடிதத்தில் இந்தியாவுடன் இணைவதற்கு இது உகந்த தருணமல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
      • அக்டோபர் 26 ம் தேதி பாகிஸ்தான் படைகள் ஸ்ரீநகரை முற்றுகையிட்ட போதும் எந்த முடிவும் எடுக்காத நேரு அக்டோபர் 27 ம் தேதி ஷேக் அப்துல்லா-வை விடுதலை செய்யவேண்டும் என்ற நேருவின் கோரிக்கை ஏற்றபின்னரே காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்று அறிவித்தார்.

என்று பேசிய கிரண் ரிஜிஜு, நேரு மீது பழிசுமத்தும் கூட்டமாக இந்த நிகழ்ச்சியை மாற்றிக்கொண்டார்.

இதுகுறித்து ‘தி வயர்’ இதழில் விரிவான கட்டுரை எழுதியுள்ள மூத்த பத்திரிகையாளர் பிரேம் ஷங்கர் ஜா, காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அதிகம் மேற்கோள் காட்டும் ‘காஷ்மீர் 1947 : வரலாற்றில் மாற்று கருத்து” (Kashmir 1947 – Rival Versions of History) என்று தான் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை அதில் குறிப்பிட்டுள்ள அவர் கிரண் ரிஜிஜூ பேசியதில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்

முதலில் 1947 ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைவது குறித்து எந்த ஒரு உறுதியான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாறாக உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் மற்றும் டோக்ரா இன ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வந்த காஷ்மீர் முஸ்லீம் கான்பரன்ஸ் கட்சி தலைவர் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் நேரு குரல் கொடுத்துவந்தார்.

ஷேக் அப்துல்லா-வை விடுதலை செய்யக்கோரி 1946 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜவஹர்லால் நேரு ராவல்பிண்டி வழியாக காஷ்மீர் எல்லையான முஸாபராபாத்-தை அடைந்த போது ராஜா ஹரி சிங் உத்தரவின் பேரில் நேரு  கைது செய்யப்பட்டு விருந்தினர் மாளிகையில் மூன்று நாட்கள் சிறைவைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து ஹரி சிங் மற்றும் நேரு இடையே உருவான மனக்கசப்பை நீக்கவே 1947 ம் ஆண்டு ஜூலை மாதம் லாகூரைச் சேர்ந்த ஹிந்து தலைவரான பகதூர் கோபால் தாஸ் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல் உதவியுடன் நேருவை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஹரி சிங் ஈடுபட்டார்.

அதுவரை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் செயல்படுவதையே விரும்பிய மன்னர் ஹரி சிங்-கின் எண்ணத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொள்ள விரும்பாததால் இந்தியாவுடன் இணைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் நேருவுடன் இணக்கமாக இருக்க இந்த முயற்சியை மேற்கொண்டார்.

தவிர 1946 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் தேதி ராவல்பிண்டி-யில் முஸ்லீம் லீக் கட்சியின் தூண்டுதலின் பெயரில் முதன் முதலில்  இனப் படுகொலை நடைபெற்றதை அடுத்து 2360 ஹிந்துக்கள் தங்கள் உடைமையை இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள காஷ்மீர் எல்லையில் உள்ள முஸாபராபாத் வந்தனர்.

பாகிஸ்தானில் 6 சதவீத இந்துக்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர்கள் அனுபவித்த இன்னலை நேரடியாக பார்த்த மன்னர் ஹரி சிங் 23 சதவீத இந்துக்கள் உள்ள காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் எண்ணத்தை முற்றிலும் வெறுத்தார்.

அதேவேளையில், காஷ்மீரில் இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானில் உள்ள சன்னி இனத்தில் இருந்து மாறுபட்டவர்கள் என்பதாலும் இதுகுறித்த சர்ச்சையை முஸ்லீம் லீக் கட்சி ஏற்கனவே எழுப்பிய நிலையில் காஷ்மீர் முஸ்லீம்களுக்கும் பாகிஸ்தானியர்களிடம் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தார்.

இதனை அடுத்து  நேருவுடனான மனக்கசப்பை போக்க 1947 ம் ஆண்டு தீவிர முயற்சியில் இறங்கிய ஹரி சிங் முதல் முயற்சியாக மகாராணியான தனது மனைவி மற்றும் தனது 16 வயது மகன் கரண் சிங் இருவரையும் லாகூருக்கு அனுப்பி லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மெஹர் சந்த் மகாஜன் என்பவரை ரகசியமாக சந்தித்து நேருவை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

மெஹர் சந்த் மகாஜன்

அதற்கான முயற்சியை மேற்கொள்வதாக மகாஜன் கூறிய நிலையில் மகாஜன் மற்றும் மகாராணி சந்திப்பு குறித்து தகவலறிந்த பிரிட்டிஷ் புலனாய்வு படையினர் இந்த விவகாரம் நேருவின் காதுகளுக்கு எட்டும் முன்னர் மகாஜனை அழைத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லை நிர்ணயம் செய்யும் ராட்க்லிஃப் கமிஷன் உறுப்பினராக நியமித்தது.

இதன் மூலம் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கான தனது முயற்சியை பிரிட்டிஷ் அரசு துவங்கியது.

இதனை அடுத்தே இரண்டாவது முயற்சியாக மேலே குறிப்பிட்டது போல் ஹிந்து தலைவரான பகதூர் கோபால் தாஸ் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல் உதவியை நாடியது.

ராட்க்லிஃப் கமிஷன் கலைக்கப்பட்ட பின் காஷ்மீர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மெஹர் சந்த் மகாஜன் மூலம் மூன்றாவது முயற்சியில் செப்டம்பர் மாதம் 19 ம் தேதி இந்திய பிரதமர் நேருவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார் ராஜா ஹரி சிங்.

காஷ்மீரின் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டால் இந்தியாவுடன் இணைவது குறித்து மன்னர் பரிசீலிப்பதாக உள்ளார் என்று மகாஜன் கூறியதைக் கேட்டு கோபமடைந்த நேரு முடியாது என்று நிராகரித்ததோடு, ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரச் சொன்னார்.

முதல் முறையாக நேருவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து குழப்பமடைந்தார் ராஜா ஹரி சிங்.

அதேவேளையில், காஷ்மீர் இணைப்புக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் ஹைதராபாத் நிஜாம் மன்னரும் இதேபோன்ற கோரிக்கையை வைத்தால் என்ன செய்வது என்ற கோணத்தில் யோசித்த  நேரு, ராஜா ஹரி சிங் கோரிக்கையை முழுவதுமாக நிராகரித்தார்.

தவிர, தன்னாட்சி அதிகாரம் பெற்ற காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் ஆகிய சமஸ்தானங்களைப் பொறுத்தவரை 77 சதவீத இஸ்லாமியர்கள் உள்ள காஷ்மீரில் இந்து மன்னர் தலைமையிலான ஆட்சியும்.

81 சதவீத ஹிந்துக்கள் உள்ள ஹைதராபாத்தில் முஸ்லீம் மன்னர் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வந்தது. மேலும் காஷ்மீரை விட 3 மடங்கு அதிகமான மக்கள் தொகையும் நான்கு மடங்கு அதிகமான செல்வமும் ஹைதராபாத்திடம் இருந்தது.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட காஷ்மீரை விட கிழக்கு இந்திய கம்பெனி-யுடனோ அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவோ இல்லாத ஹைதராபாத்-தை இந்தியாவுடன் இணைப்பதே சிறந்ததாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காஷ்மீரைப் போல் அல்லாமல் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேராமல் தனி நாடாக இருக்கப்போவதாக 1947 ஜூலை 11 ம் தேதி ஹைதராபாத் நிஜாம் உறுதிபட அறிவித்தார்.

இந்திய நிலப்பரப்புக்கு நடுவே தனி நாடாக ஹைதராபாத் இருப்பது எல்லையில் உள்ள காஷ்மீரைக் காட்டிலும் ஆபத்தானது என்று உணரப்பட்டதால் ஹைதராபாத்-தை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைப்பதில் முழுகவனமும் செலுத்தப்பட்டது.

1947 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் நிலவிய இனக் கலவரம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள இஸ்லாமிய மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது நிலையை மாற்றிக்கொள்ள நினைத்த ஹைதராபாத் நிஜாம், அதிக சலுகைகள் வழங்க முன் வந்த  பாகிஸ்தானுடன் இணைய முயற்சி மேற்கொண்டார்.

நிஜாமின் இந்த முயற்சியை முறியடிக்க இருந்த ஒரே வழி மன்னர் ஒப்புதல் அளித்தால் போதாது மக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது குறித்து பரிசீலக்கப்படும் என்று நேரு கூறினார்.

இதனால் ஹைதராபாத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் இந்தியாவை ஆதரிக்க வாய்ப்பு இருப்பதை உணர்ந்ததோடு காஷ்மீரில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டால் அவர் மூலம் காஷ்மீர் மக்களின் ஆதரவு இந்தியாவுக்கு ஆதரவாக பெருகும் என்று ராஜதந்திரமாக செயல்பட்டார் பிரதமர் நேரு.

ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யவேண்டும் என்ற நேருவின் கோரிக்கையை மகாராஜா ஹரி சிங்-கிடம் கூறினார் மகாஜன். இதனை ஏற்றுக்கொண்ட ஹரி சிங் செப்டம்பர் 29 ம் தேதி ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்தார்.

நேருவின் கோரிக்கை செப்டம்பர் 29 ம் தேதியே நிறைவேற்றப்பட்டபோதும் நேருவின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு 25 நாட்கள் தாமதமானது ஏன் என்ற நியாயமான கேள்வி அனைவருக்கும் எழக்கூடும்.

ஜெனரல் காரியப்பா – ஜவஹர்லால் நேரு

சுதந்திரம் பெற்று 50 நாட்கள் கூட ஆகாத நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற இனக்கலவரத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் மரணமடைந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு நிலவரங்களில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இரண்டாவதாக ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்த போதும் காஷ்மீர் நிர்வாகத்தில் அப்துல்லா மற்றும் அவரது தேசிய மாநாட்டுக் கட்சியின் பங்கு என்ன என்பது குறித்து மகாராஜா ஹரி சிங் எந்த ஒரு முடிவும் எடுக்காதது மற்றொரு காரணம்.

இருந்தபோதும் பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிரதமர் நேருவுக்கு தகவல் அளிக்காத பிரிட்டிஷ் படையினரின் செயலே மூன்றாவது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் மாத துவக்கத்தில் ராவல்பிண்டி இணை ஆணையர் வீட்டில் பழங்குடி இன தலைவர்கள் ஏழெட்டு பேர் கலந்து கொண்ட சந்திப்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் அவர்கள் காஷ்மீர் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ இடைக்கால தலைவர் – ஜெனரல் பிராங்க் மெஸ்சேர்வி என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் காதுகளுக்கு எட்டியது.

இந்த சந்திப்பு மற்றும் படையெடுப்பு தொடர்பான விவகாரத்தை தனது உயரதிகாரியான டெல்லியில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாட்டு ராணுவத்தின் பீல்ட் மார்ஷல் கிளாட் ஆச்சின்லெக்-கிற்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்தும் பீல்ட் மார்ஷல் கிளாட் ஆச்சின்லெக் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததோடு கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் மவுண்ட்பேட்டனிடமும் இந்த தகவலை தெரிவிக்க மறந்துவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாகவே ஆச்சின்லெக் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எம். கரியப்பா இந்திய ராணுவத்தின் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

ஷேக் அப்துல்லா மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் பங்கு குறித்து ஹரி சிங் முடிவெடுக்க தயக்கம் காட்டிய அதேவேளையில் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்று பாகிஸ்தான் பழங்குடி குழுவினர் காஷ்மீரின் முசாபராபாத்தை தாண்டி ஜீலம் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்தனர்.

ஸ்ரீநகரில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள மஹுரா மின் நிலையத்தைக் கைப்பற்றிய அவர்கள் அக்டோபர் 23 ம் தேதி இரவு மின்சாரத்தை துண்டித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜா ஹரி சிங்கிற்கு எச்சரிக்கை மணி அடித்தனர்.

மறுநாள் அக். 24 காலை காஷ்மீர் துணைப் பிரதமர் ராம் லால் பத்ராவிடம் இந்தியாவுடன் இணைவதற்கான கடிதத்தை கொடுத்து டெல்லிக்கு அனுப்பினார் ஹரி சிங்.

உடனடியாக வி.பி. மேனன், அப்போதைய லெப்டினன்ட் கர்னல் சாம் மானெக்ஷா மற்றும் ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸின் விங் கமாண்டர் திவான் ஆகியோரை அழைத்த நேரு ஸ்ரீநகர் சென்று இந்தியாவுடன் இணைவதற்கான இறுதி ஒப்பந்தத்தில் ராஜா ஹரி சிங்கிடம் கையெழுத்து வாங்கவும். ராணுவ தேவைகளை மதிப்பிடவும் ஸ்ரீநகர் விமான நிலையத்தின் இராணுவ விமானத்தைத் தாங்கும் திறனை அளவிடவும் உத்தரவிட்டார்.

காஷ்மீருக்கு ஜனநாயக அந்தஸ்த்து வழங்குவதில் ராஜா ஹரி சிங் தயக்கம் காட்டி வந்த நிலையில் ஷேக் அப்துல்லா மற்றும் ராஜா ஹரி சிங் ஒப்புதலுடன் ஜனநாயக அந்தஸ்த்துடன் இணைவது மட்டுமே ஒரே வழி என்று நேரு உறுதியுடன் இருந்தார்.

போர் சூழல் காரணமாக இந்தியாவுடன் இணையும் காஷ்மீரின் முடிவை ஏற்று டெல்லி விரும்பியதைச் செய்ய மகாராஜா தயாராக இருந்தாலும் காஷ்மீர் மக்கள் மற்றும் ஷேக் அப்துல்லாவின் மனநிலை பின்னாளில் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தின் காரணமாக நேரு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் பட்சத்தில் அதன் மக்களின் விருப்பம் காரணமாகவே இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்று உலகிற்கு அறிவிக்க காஷ்மீர் உடன்படிக்கை உதவியாக இருக்கும் என்று நேருவும் சர்தார் வல்லபாய் பட்டேலும் அந்த தருணத்தில் முடிவெடுத்தனர்.

அக்டோபர் 25 ம் தேதி மாலை வரை நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து இருள்சூழ்ந்த விமான ஓடுபாதையில் தேசிய மாநாட்டு கட்சியினர் ஏற்றிய தீப்பந்தங்களின் ஒளியில் பறந்த விமானத்தில் டெல்லி திரும்பிய வி.பி. மேனன் மறுநாள் அமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவிடம் அறிக்கை அளித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 26 ம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

கிரண் ரிஜிஜூ

காஷ்மீரின் இனத் தேசிய அடையாளத்தின் 370 வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட வெளிப்படையான உத்தரவாதத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு 371 வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற ஒன்பது மாநிலங்கள்  உருவாக்கப்பட்டன என்பதை மறந்து பேசியுள்ள கிரண் ரிஜிஜூ காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள சேதத்தை மறைக்கவும் மோடியின் தோளில் இருந்து நேரு மீது பாரத்தை இறக்கி வைப்பதற்கும் இதுபோன்ற ஆதாரமற்ற பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இறந்து போன பிரதமரின் பெயரில் பழி சுமத்துவதன் மூலம் அவர் இனி தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது என்பதையும் அவர் கட்டிக்காத்த காங்கிரஸ் கட்சி தற்போது மந்தமாகவும் உட்கட்சி பூசல்களாலும் அழிந்து வருவதால் இந்த வரலாற்று பிழைகளை சரி செய்ய யாரும் வரமாட்டார்கள் என்பதையும் கிரண் ரிஜிஜூ உணர்ந்தே இவ்வாறு பேசியிருக்கிறார் என்று பிரேம் ஷங்கர் ஜா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.