சென்னை:  புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது பாஜகவின் மக்களை ஏமாற்ற கடைசி நேர கண்துடைப்பு நாடகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடந்த 5 ஆண்டு காலமாக தொல்லைக்கொடுத்து வந்தவர் ஆளுநர் கிரண்பேடி. மாநில அரசை விட தனக்கே அதிக அதிகாரம் என்ற மமதையில், மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி மறுத்து, சர்ச்சையை உருவாக்கி வந்தார்.  இதன் காரணமாக முதல்வர் நாராயணசாமிக்கும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடிக்கும்,  மோதல் நிலவி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் டில்லி சென்ற முதல்வர் நாராயணசாமி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கிரண்பேடியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, கிரண்பேடியை குடியரசுத் தலைவர் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக,  தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு புதுச்சேரி துணைநிலை கவர்னராக, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றம் குறித்து  கருத்து தெரிவித்த முதல்வர் நாராயணசாமி கூறியது , எங்களது பல கட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்று கிரண்பேடியை நீக்கியுள்ளதை வரவேற்கிறோம். மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்பட்ட கிரண்பேடியை நீக்கியது புதுச்சேரி மக்களின் வெற்றியாகும். மக்களை மதிக்காமல் தொடர்ந்து தடையாக இருந்து வந்துள்ளார் கிரண்பேடி என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளது குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய #KiranBedi மாற்றப்பட்டிருப்பது மிகக் காலதாமதான அறிவிப்பு. கிரண்பேடி தரம் தாழ்ந்த அரசியலைச் செய்ய அனுமதித்து, புதுச்சேரி வளர்ச்சியை முடக்கிப் போட்டிருந்தது பாஜக! மக்களை ஏமாற்ற கடைசி நேர கண்துடைப்பு நாடகம் இது! மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்! என்று தெரிவித்துள்ளார்.