தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ஜிரலோங்கோர்ன் சமீப ஆண்டுகளாக அடிக்கடி ஜெர்மனிக்குச் சென்று ஓய்வெடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

2020 ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு முன் ஜெர்மனியில் சிலநாட்கள் தங்கியிருந்த தாய்லாந்து மன்னர், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் 18 மாதங்கள் கழித்து இந்த வாரம் மீண்டும் ஜெர்மனி சென்றுள்ளார்.

ஜெர்மனியின் முனிச் நகருக்கு அருகில் உள்ள பவரியன் மலைப்பிரதேசத்தில் இவருக்கு சொந்தமாக மாளிகை ஒன்று உள்ளபோதும் முனிச் விமான நிலையம் அருகில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருக்கிறார்.

மெய்க்காவலர்கள், பணியாளர்கள் என்று 250 பேருடன் தனி விமானத்தில் வந்து இறங்கிய மன்னர் மஹா வஜ்ஜிரலோங்கோர்ன் தனது பிரியமான நாய்குட்டிகளில் 30 புசுபுசு நாய்குட்டிகளையும் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார்.

ஹில்டன் ஹோட்டலின் நான்காவது மாடியை 11 நாட்களுக்கு மொத்தமாக வாடகைக்கு எடுத்திருக்கும் தாய்லாந்து மன்னர், எத்தனை நாட்களுக்கு ஜெர்மனியில் இருப்பார் என்பது தெரியவில்லை.

ஹில்டன் ஹோட்டலில் தாய்லாந்து மன்னர்

தாய்லாந்தில் மன்னருக்கு எதிராக அந்நாட்டு மக்களின் ஜனநாயக ஆதரவு குரல் வலுத்துவரும் வேளையில் ஜெர்மனியை தனது ஓய்வுக்கான நாடாக தேர்ந்தேடுத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவர் தங்கி இருக்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு வந்த போது, ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்ததை மன்னரின் பாதுகாவலர்கள் தட்டிக்கேட்ட நிலையில் அது சர்ச்சையானதுடன் தாய்லாந்து மன்னரின் ஜெர்மன் விஜயம் வெளியுலகுக்கு கசிந்தது.

இந்த விவகாரத்தால், மன்னரையும் அவரது குடும்பத்தினர் குறித்தும் பொதுவெளியில் விமர்சனம் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று ஏற்கனவே கடந்த ஆண்டு தாய்லாந்தில் சட்டம் கொண்டுவந்ததை எதிர்த்துப் போராடும் மக்களிடம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.