சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாமை தமிழ்நாடு  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, மனநல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களால் நடத்தப்படவுள்ள ரிவைவ்  பேக்கரியை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது  சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குநர் பி.பூர்ணசந்திரிகா, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,   கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை தரம் உயர்த்தி, மனநல ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு தற்கொலையால் 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையும், விபத்துகளால் 11 ஆயிரம் முதல் 12 வரையும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

. தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே தூக்குப்போட்டு தற்கொலை செய்கின்றனர். மற்றவர்கள் எலி மருந்து,பால்டாயில், சானி பவுடர் போன்றவற்றை சாப்பிட்டு தற்கொலைசெய்து கொள்கின்றனர். சானி பவுடரை விஷம் கலந்தபவுடராக மாற்றி விற்பனை செய்கின்றனர். அதில் விஷத்தின் அளவு அதிகமாக உள்ளதால், அதனை சாப்பிடுபவர்களை காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தற்கொலை எண்ணிக்கையை குறைப்பதற்கானநடவடிக்கையாக, சானிபவுடரை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், பால்டாயில், எலி மருந்து ஆகியவற்றை கடைகளில் மறைமுகமாக விற்கவேண்டும். வெளிப்படையாக விற்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.