பெங்களூரு: கொள்கை இல்லாதவர் குஷ்பு, அவர் பாஜகவில் சேர்ந்துள்ளதால், தமிழகத்தில்  எந்த தாக்கமும் ஏற்படாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார்.

அரசியல் பச்சோந்தியாக மாறியுள்ள நடிகை குஷ்பு, நேற்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பாஜகவை கடுமையா விமர்சித்து வந்தவர், தற்போது பாஜகவில் அவர் இணைந்திருப்பது கடும் விமர்சனங்கள் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த  தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது, கடந்த வாரம்தான் நடிகை குஷ்பு, பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசினார். இந்த நிலையில் அவர் அதே கட்சியில் தற்போது சேர்ந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு எந்த கொள்கையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததால் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ள காங்கிரசை பலப்படுத்தும் பணிகளை நாங்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். குஷ்பு சேர்ந்துள்ளதால், தமிழகத்தில் பா.ஜனதா எந்த சாதனையும் செய்யாது. சில காரணங்களால் அவர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.