சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை அழைக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வரும் 19ம் தேதி தொடங்கி ஜனவரி  31ஆம் தேதி வரை  நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் ஏற்கனவே   2021ம் ஆண்டிற்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியாணா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ம் ஆண்டிற்கு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பின்னர், கொரோனா  தொற்று பரவல் காரணமாக 2020-ல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு கேலோ இந்தியா விளாயட்டு போட்டிகள், தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் சென்னை உள்பட 4 நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில்,  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை சந்தித்து  அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி  இன்று டெல்லி செல்கிறார். நாளை டெல்லியில் பிரதமரை சந்தித்து அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.  தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்திக்கிறார்.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை சந்தித்து அழைப்பிதழை வழங்கவுள்ளேன். நிகழ்ச்சியில் பங்கேற்பது அவர் விருப்பம்.  பிரதமரை சந்திக்கும்போது தமிழகத்துக்குத் தேவையான நிவாரணத் தொகையை கோருவேன் எனக் குறிப்பிட்டார்.