சென்னை: ராகுலுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று குடியரசு தலைவரிடம் முறையிட முடிவு செய்துள்ளன. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர்.
மோடி பெயருள்ளவர்கள் திருடர்கள் என கடந்த 2019ம் ஆண்டு ராகுல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது ஒருதரப்பினரை குற்றம் சாட்டுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக இன்று நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள், அதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை அவையில் பேச விடவில்லை. அவர்கள் தொடர்ந்து கொள்ளையடிப்பார்கள் & நீங்கள் வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்பதுபோல அவர்களின் நடவடிக்கை உள்ளது. பேச அனுமதி கேட்டு ராகுல் காந்தி இன்று கடிதம் எழுதியும், அனுமதிக்கப்படவில்லை. இப்படியே போனால் நாட்டில் சர்வாதிகாரம்தான் வளரும் என்றார்.
பின்னர் மல்லிகார்ஜுன கார்கே, இல்லத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில், ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சௌக் பகுதி வரை நடந்து போராட்டம் நடத்தவும், அதன் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்ப்பட்டது.
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், பேரணியை தொடங்கினர். விஜய் சௌக்கில் போலீசார் அறிவிப்புகளை வெளியிட்டு, அங்கு போராட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், அதை பொருட்படுத்தாக எதிர்க்கட்சியினர், அதானி விவகாரத்தில் ஜேபிசி விசாரணை கோரி, குடியரசு தலைவர் மாளிகை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.