ஐதராபாத்: நாடு முழுவதும் முக்கிய நபர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடிப் பேரின் தகவல்களை திருடியதாக ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நாட்டில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய தகவல் திருட்டு இது என்றும்,  இதுபோன்ற தகவல் திருட்டுக்கள் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தகவல்கள் திருடப்படுவதாக வந்த புகார்களின் பேரில் ஐதராபாத் நகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததுடன், சிலரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்,  ஜஸ்ட் டயல் மற்றும்   பிற சேவை வழங்குநர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 16. 8 கோடி இந்தியர்களின் முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடி ஒரு கும்பல் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அந்த 7 பேர் கொண்ட  கும்பலை கூண்டோடு   தெலுங்கானாவின் சைபராபாத் போலீஸார்  கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தரவுகளில், வங்கிகளின்  தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் தரவுகள் மற்றும் பொதுமக்களின் ஏராளமான தரவுகளும் உள்ளது,. இந்த தரவுகள் திருட்டு, “உளவு” மற்றும் “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்” என்று காவல்துறை கூறியது.

ஏற்கனவே. இதேபோன்ற வழக்கில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் பரோடாவின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை திருடியதற்காக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒன்பது பேரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர்.  அப்போது, அதுபோல ஏழு பேர் கொண்ட கும்பல் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிடிபட்டுள்ளனர்.

விசாரணையில் இந்த கும்பல் கடந்த 2021 இல் தரவுத் திருட்டைத் தொடங்கியதிலிருந்து முக்கிய நபர்களின்  தரவுகள் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் முதல் பான் கார்டு மற்றும் வங்கி விவரங்கள் (டெபிட் / கிரெடிட் கார்டு எண்கள்) வரை திருடி இருப்பதும், , சில சந்தர்ப்பங்களில் மாத வருமானம், கடன்கள் மற்றும் காப்பீடு பற்றிய தகவல்களையும் திருடி உள்ளனர். இதுமட்டுமின்றி  நீட் தேர்வாளர்கள் வழங்கிய தகவல்களையும் திருட்டி உள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த தகவல் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட கும்பலைச் சேர்ந்த குமார் நிதிஷ் பூஷன், குமாரி பூஜா பால், சுஷீல் தோமர், அதுல் பிரதாப் சிங், முஸ்கன் ஹாசன், சந்தீப் பால் மற்றும் ஜியா-உர்-ரஹ்மான் ஆகியோர் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து,  இந்த தகவல் திருட்டு தொடர்பாக சைபர்கிரைம் காவல்துறையினரி விசாரணை நடத்தியும், கண்காணித்து  வந்ததாகவும்,  பதிவு செய்யப்படாத மூன்று நிறுவனங்களான டேட்டா மார்ட் இன்ஃபோடெக், குளோபல் டேட்டா ஆர்ட்ஸ் மற்றும் எம்எஸ் டிஜிட்டல் க்ரோ ஆகிய நிறுவனங்கள் மூலம் திருடப்பட்ட தகவல்களை சில நிறுவனங்களிடம் விற்பனை செய்து,  , மாதந்தோறும் ரூ.6 லட்சம் லாபம் ஈட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக க சைபராபாத் போலீஸ் கமிஷனர்  தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற தகவல் திருட்டு, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடமிருந்து  சட்டவிரோதமாக அணுகப்பட்டிருக்கலாம் என்றும், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.