டெல்லி: மோடி குறித்து ராகுல் பேசியது தொடர்பான வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால், ராகுல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி   ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், ராகுல்மீது  கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்  தண்டனை விதிக்கப்பட்ட மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மக்களவை செயலர் திரிபாதி வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. தண்டனை காலமான 2 ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.