டில்லி

நேற்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை காங்கிரஸ் தலைவர் கார்கே புறக்கணித்துள்ளார்.

நேற்று 77 ஆம் சுதந்திர தினத்தையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.  அவரது உரையைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.  மேலும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றிய இந்நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துக் கொள்ளவில்லை.

கார்கேவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது. சுதந்திர தினத்தன்று பிரதமரின் உரை நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணித்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சமயம் கார்கே தனது இல்லத்திலும், பின்னர் காங்கிரஸ் தலைமையகத்திலும் தேசிய கொடியை ஏற்றினார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே இது குறித்து,

“எனக்குக் கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. அதோடு, நெறிமுறைகளின்படி நான் என்னுடைய வீட்டில் மூவர்ணக் கொடி ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். எனவே என்னால் செங்கோட்டைக்குச் செல்ல முடியவில்லை”

என்று விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது உரையின்போது, “அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டின் சாதனைகளைப் பட்டியலிடுவேன்” என கூறியதை கார்கே கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு கார்கே,

“உங்கள் வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது. அப்படி இருக்க 2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே கூறுவது ஆணவம். வரும் ஆண்டு (பிரதமர் மோடி தேசியக் கொடியை அவரது வீட்டில் தான் ஏற்றுவார். “

 என்று கூறினார்.