டில்லி

நேற்றைய சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

நேற்று சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  பிரதமர் மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் தனது 90 நிமிட உரையில் நாட்டின் சாதனைகளைப் பட்டியலிட்டு 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என உறுதியளித்தார். தவிர ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என்றும், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,

”சுதந்திர தின உரையில் கடந்த 9 ஆண்டுகளில் தனது அரசு என்ன சாதித்துள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதை விட, திரித்துப் பேசுதல், மிகைப்படுத்துதல், பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் உரையை பிரதமர் மோடி வழங்கினார்.

அவர் நாட்டை ஒன்றிணைப்பதற்கும், இதுவரையிலான  நமது பயணத்தைக் கொண்டாடுவதற்கும், அந்த துன்பங்களின் வலியையும் வேதனையையும் ஒப்புக்கொள்வதற்கும், வரவிருக்கும் சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் பதிலாக மோடி தன்னை பற்றியும், தனக்கான மரியாதை குறித்தும் பெருமை பேசினார்.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட பேரழிவுகளை, நாட்டின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, பிரதமர் உரையாற்றினார். மணிப்பூரைப் போர்க்களமாக மாற்றுவதற்கு வழிவகுத்த மோசமான தோல்விகள் குறித்து அவர் வருத்தமோ அல்லது ஒப்புக்கொள்ளவோ இல்லை.

அங்கு பெண்கள் கொடூரமான முறையில் அத்துமீறலுக்கு ஆளான கதியை முழு தேசமும் பார்த்தபோது, அவர் ‘பாரத மாதா’ புத்துயிர் பெறுவதாகத் துணிச்சலாகக் கூறுகிறார். இந்தியாவின் திறனை கொரோனா தொற்றுநோயின் போது உலகம் வியந்து பார்த்ததாகப் பிரதமர் கூறினார்.  கொரோனா பேரழிவு இரண்டாவது அலையின் போது ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே உடல்கள் குவிக்கப்பட்டதையும் கங்கையில் பாய்ந்ததையும் உலகம் மறக்கவில்லை”

என்று கூறி உள்ளார்.