டில்லி

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்காமல் இருப்பதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து கடந்த 8-ஆம் தேதி முதல் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேர்று பேசியதற்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி எதிர்வினையாற்ற, அவையில் அனல் பறந்தது.

இன்று மாலை 4 மணி முதல் மக்களவையில் பிரதமர் மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலுரை ஆற்றி வருகிறார். பிரதமர் மோடியின் மவுன விரதத்தைக் கலைக்கவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுமே பிரதமரின் பதிலுரையை எதிர்நோக்கியுள்ளன.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை ஆகஸ்ட் 11 உடன் நிறைவு பெறுகிறது. இந்தச் சூழலில் இன்று பிரதமர் ஆற்றி வரும் பதிலுரை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்பு, மாநிலங்களவையில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “அவைக்கு வராமல் இருக்க மோடி என்ன கடவுளா? பிரதமர் தானே!” என்ற கண்டனம் தெரிவித்துள்ளார்.