திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளா முதலமைச்சர்  பினராயி விஜயன் பதவி விலக கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

முதலமைச்சர் பினராயி விஜயனின் தலைமை செயலர், தகவல் தொடர்பு துறை செயலாளராக இருந்த சிவசங்கர், ஸ்வப்னாவை நியமித்தார் என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிவசங்கர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந் நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் வயநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.  அவர்கள் போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். ஆகையால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.