புதுடெல்லி: பள்ளிக் கல்வியின் தரநிலை தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

அதேசமயம், இந்த விஷயத்தில் பாரதீய ஜனதா ஆளும் உத்திரப்பிரதேசம் கடைசி இடம் பிடித்துள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வுப்படி, 20 பெரிய மாநிலங்களின் பள்ளிக் கல்வி தரநிலை மதிப்பீட்டின்படி, கேரளா 76.6% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடம்பிடித்த உத்திரப்பிரதேசம் பெற்ற மதிப்பெண்கள் 36.4%.

அதேசமயம், ஹரியானா, அஸ்ஸாம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள், கடந்த 2016-17ம் ஆண்டுக்கான மதிப்பீடுகளோடு ஒப்பிடுகையில், தற்போது முன்னேறியுள்ளன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கற்றல் பயன்விளைவுகள், அணுகல், பங்கு, உள்கடைமைப்பு மற்றும் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது. இந்தவகையில் பார்க்கையில், அணுகல் மற்றும் பங்கு பயன்விளைவில் தமிழ்நாடும், கற்றல் பயன்விளைவில் கர்நாடகமும் முன்னிலை வகிக்கின்றன.