புதுடெல்லி: முறைகேட்டில் ஈடுபட்ட 111 மருத்துவமனைகளின் பெயர்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்.

மத்திய அரசின் ‘பெயர் மற்றும் வெட்கம்’ என்ற முன்னெடுப்பின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த மருத்துவமனைகள் பட்டியலிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரின் ஆயூஷ்மான் பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை, முறைப்படி சிறப்பாக நடைமுறைப்படுத்தும் மருத்துவமனைகளை ‘பெயர் மற்றும் புகழ்’ என்ற முன்னெடுப்பின்படி கவுரவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வலுவான மோசடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஏபி-பிஎம்ஜேஏஒய் திட்டத்தின் செயல்பாடு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தவறு செய்வோர் உடனடியாக கண்டறியப்பட்டு, அவர்களின் மீது வலுவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.