சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 78 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாரதீய ஜனதாக் கட்சி.

இதில் தற்போதைய முதல்வர் மனோகர் லால் கட்டார் இடம்பெற்றுள்ளார். அவர் கர்னால் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

ஹரியானா சட்டசபை 90 உறுப்பினர்களைக் கொண்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ. தனிப்பெரும்பான்மையுடன் வென்றது. வரும் அக்டோபர் 21ம் தேதி அம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே 78 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது பாரதீய ஜனதா. இதில் 9 பெண்களும், 2 இஸ்லாமியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் பாரதீய ஜனதாவில் இணைந்த ஒலிம்பிக் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங், மற்றொரு பெண் மல்யுத்த வீரர் உள்ளிட்ட பல பெயர்கள் அடங்கியுள்ளன.