திருவனந்தபுரம்:

ஆரஞ்ச் நிறத்தில் இந்திய பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இ பாஸ்போர்ட்

மத்திய அரசு பாஸ்போர்ட் நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. குடியேற்ற அனுமதி பெற வேண்டிய பாஸ்போர்ட், குடியேற்ற அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாத பாஸ்போர்ட் என்று இரண்டு வகையான பாஸ்போர்ட்களை கொண்டு வர முடிவு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு ஏற்ப புதிதாக ஆரஞ்ச் நிறத்தில் பாஸ்போர்ட் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு பாஸ்போர்ட்டில் உள்ள முகவரி பக்கத்தை நீக்குவது உள்ளிட்ட மாற்றங்கள் இதில் அடங்கும். சம்சுதீன் என்ற வக்கீல் இந்த முடிவுகளை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘மத்திய அரசு 2 விதமான பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ள நீல நிற பாஸ்போர்ட்டோடு ஆரஞ்ச் நிற மேல் உறை கொண்ட புதிய பாஸ்போர்ட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கல்வி பயின்றவர்களுக்கு ஒரு பாஸ்போர்ட்டும், கல்வி பயிலாதவர்களுக்கு ஒரு பாஸ்போர்ட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் நிறத்துக்கு மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவ உரிமைக்கு எதிரானதாகும். மேலும், இதன் மூலம் வெளிநாட்டு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர் கல்வி அறிவு, திறன் இல்லாதவர் என்பதை அறிந்து அவரை இழிவுபடுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பாஸ்போர்ட் மூலம் ஒரு மனிதனின் கல்வி தகுதியை அறிய கூடிய நிலை ஏற்படக் கூடாது. எந்த நாட்டிலும் இதுபோன்ற ஒரு நடைமுறை இல்லை. 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு, இந்திய பாஸ்போர்ட் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

முன்னதாக மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, கேரளா முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.