திருவனந்தபுரம்

முடி திருத்தும் கடைக்கு வருபவர்கள் வெட்டப்பட்ட தங்கள் முடியை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக நாடெங்கும் அமலாக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் போன்றவை மூடப்பட்டிருந்தன.   கத்தரிக்கோல், பிளேடுகள், டவல் போன்றவற்றால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால்  கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.  தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள கொரொனா பாதிப்பு நிலையக் கொண்டு கடைகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.   கேரள மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.  எனவே இந்த மாநிலத்தில் அதிக அளவில் ஊரடங்கு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  அவ்வகையில் கேரளாவில் பல இடங்களில் முடி திருத்தகம் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு முடி வெட்டவும் ஷேவிங் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஒருவருக்குப் பயன்படுத்திய டவலை மற்றவருக்கு பயன்படுத்த கூடாது எனவும் ஒரே நேரத்தில் இருவருக்கு மேல் காத்திருக்கக் கூடாது எனவும் அரசு நிபந்தனை விதித்துள்ளது.   கேரள முடி திருத்தகம் மற்றும் அழகு நிலைய கூட்டமைப்பு சார்பில் வேறு பல நிபந்தனைகள் விதிக்கபடுள்ளதாக தலைவர் மோகனன் தெரிவித்துள்ளார்.

மோகனன், “முடி திருத்தம் செய்துக் கொள்ள வருவோர் தங்கள் வீட்டில் இருந்து டவல் போன்றவைகளை எடுத்து வர வேண்டும்.   அவரவர்க்கு வெட்டப்பட்ட முடியை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும்.  கடைக்குள் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் உள்ளவர்கள் வர அனுமதி இலை.  முன்பின் தெரியாதோரும் கடைக்குள் வரக்கூடாது” என அறிவித்துள்ளார்.