மண மேடையில் மணமகள் கைது: 10  பேரை மணம் செய்தவர்

Must read

திருவனந்தபுரம்:  மணமேடையில் வைத்து மணப்பெண் கைது செய்யப்பட்டதும், அவர் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்ததும் கேரளாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரைப்பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (வயது 32).  இவர், சமீபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். இந்த விளம்பரத்தை பந்தளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பார்த்து  ஷாலினியை தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது தான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், முதல் கணவர் இறந்து விட்டதால் மறுமணம்  செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும்  விரைவில் கேரள ஐகோர்ட்டில் வேலை கிடைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு உறவினர்கள் மிகக் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

ஷாலினியை மணமுடிக்க எண்ணிய அந்த இளைஞர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தார். நேற்று காலை பந்தளம் அருகே ஒருகோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மணமக்களின் நெருங்கிய உறவினர்கள்  வந்திருந்தனர்.  மணப்பெண் அலங்காரத்தில் ஷாலினி கோயிலுக்கு வந்தார்.

மணமகன்  சார்பில் திருமணத்துக்கு வந்திருந்த    ஒருவருக்கு ஷாலினியைப் பார்த்ததும் அதிர்ச்சியானது. தனது நண்பரை திருமணம் செய்துகொண்டு சில நாட்களிலேயே தலைமறைவாகிவிட்ட பெண்மணி இவர் என்று சந்தேகித்திருக்கிறார்.

உடனே நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார். நண்பரும் அங்கு விரைந்து வந்தார்.

மணக்கோலத்தில் ஷாலினி, தன்னை திருமணம் செய்துகொண்டு தலைமறைவானவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், மண மேடையில் இருந்த ஷாலினியை கைது செய்தனர்.

அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, இதுவரை 10 பேரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டிருப்பதாகவும், திருமணம் முடிந்த சில நாட்களில் நகைகளுடன் தலைமறைவாவது வழக்கம் என்றும் தெரிவித்தார்.

ஒரு பெண், பத்து ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article