மும்பை:

பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க சிவசேனா தயக்கம் காட்டி வருகிறது. ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்க விருப்பதையடுத்து பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.ஜ. கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள சிவசேனா, ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்தமுடிவை அறிவிக்கவில்லை.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியது, நாளை நடக்க உள்ள சிவசேனா நிர்வாகிகள் கூட்டம் உத்தவ் தாக்கரே தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.வை, சிவசேனா வலியுறுத்தி வந்த நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பெயரை பா.ஜ., அறிவித்ததில் சிவசேனா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா மூத்த தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது, ஓட்டு வங்கி அரசியலுக்காக தலித் ஒருவரை ஜனாதிபதியாக்க சிலர் முயன்றால் அவர்களுடன் இனியும் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார்.