திருவனந்தபுரம்:
விபத்தில் காயமடைந்த தமிழக நபருக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்த தால், உயிரிழந்த நெல்லை முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆனால், அவருக்கு, சிகிச்சை வழங்க, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின், அவர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
கேரள மருத்துவமனைகள், இப்படிச் செய்ததன் மூலமாக, மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது மிகக் கொடூரமான செயல். எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க, சட்ட ரீதியாக, சில திருத்தங்களை அமல்படுத்துவோம் என்றும், இதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரள முதல்வர் விபத்தில் சிக்கி, சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக முருகன் குடும்பத்தாரை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார்.