டில்லி

மைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் போன்றோருக்கு மின்சார கார்கள் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி வாகனங்களால் காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது.   அதன் காரணமாக மின்சார வாகனங்கள் உபயோகிப்பதை வெகுவாக பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.    அனைத்து அரசுகளுக்கும் வாரியம் இந்த பரிந்துரையை அனுப்பி உள்ளது.

அதையொட்டி, மத்திய மின்சாரத்துறை அமைச்சர்  பியூஷ் கோயல், “அரசுத்துறைகளில் இனி மின்சார வாகனங்கள் வாங்குவதை துவக்க உள்ளோம்.   எனர்ஜி எஃபிஷியன்சி சர்வீசஸ் லிமிடெட் என்னும் அரசு நிறுவனம் மூலம் வரும் வெள்ளிக்கிழமை அன்று மின்சார வாகனங்களுக்கான டெண்டர் விடப்படும்.    முதல் கட்டமாக 1000 வாகனங்கள் வாங்க உத்தேசித்துள்ளோம்” என தெரிவித்தார்.

எனர்ஜி எஃபிஷியன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சவுரப் குமாரும் இது பற்றி கூறியுள்ளார்.  அவர், “முதலில் நான்கு கதவுகளுடன் உள்ள 1000 கார்கள் வாங்கப்படும்.  இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120-150 கி மீ வரை செல்லக் கூடியவையாக இருக்கும்.    அதில் நவம்பருக்குள் 300-400 வாகனங்கள் முதல் கட்டமாக வாங்கப்படும்.   அவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.    அதற்கான ஓட்டுனர்கள், மற்றும் பராமரிப்பை எங்கள் நிறுவனமே அளிக்கும்.  இதன் மூலம் மாசுகட்டுப்பாட்டை பாதுகாப்பதுடன் பராமரிப்பு செலவு ஒரு வாகனத்துக்கு மாதம் ரூ.5000 வரை குறையும்” எனக் கூறி உள்ளார்.

மொத்தத்தில் 10000 வாகனங்கள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.   அது தவிர 4000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவவும் டெண்டர் கோரப்பட உள்ளது.