சென்னை: மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.க்களின் கோட்டாவை  நிறுத்தி வைக்க மத்தியஅரசு பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசின் கேந்திர வித்யாலாயா பள்ளிகள்  நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,  ஒவ்வொரு எம்.பி.க் களுக்கும் முதலில் 6 சீட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பின்னர் கடந்த 2016ம் ஆண்டு 10 ஆக உயர்த்தப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. பல எம்.பி.க்கள் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெறுவாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வாரம் பேசினார். அப்போது, கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கை யில் எம்.பி ஒதுக்கீடு தொடர வேண்டுமா அல்லது ரத்து செய்யலாமா என்பதை கூட்டாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்று மக்களவையில் வலியுறுத்தினார்.

மேலும்,  புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ்  நடப்பாண்டு முதல், கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது 6 ஆக இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில்,  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்கைக்கு புதிய தடை விதித்து அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மார்ச 21ந்தேதியுடன் நிறைவு பெற்ற நலையில், இந்த ஆண்டு முதல் எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்து கேந்திரிய பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,

தற்போது எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.  கேந்திர வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பரிந்துரைக் கடிதம் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும்,  அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளியின் தாளாளர்கள் யாரும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் பரிந்துரை கடிதங்களை பெற வேண்டாம் என கேந்திர வித்யாலயா அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதனால் எம்.பி.க்கள் கோட்டா ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், எம்.பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களை காட்டிலும் அதிகளவில் அந்த ஒதுக்கீட்டில் மாணவர்கள் பயில்கின்றனர். எம்.பி.க்கள், அமைச்சர்கள் பல கோரிக்கைகளைப் பெறுவதால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே  1997இல் எம்.பி ஒதுக்கீடு முதன்முதலில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், 1998இல் அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் உத்தரவைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், மார்ச் 2010 இல், UPA-2 அரசாங்கத்தின் கீழ், அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இரண்டு ஒதுக்கீடுகளையும் நிறுத்தி வைத்தார். ஆனால், பின்னர் அரசியல் நெருக்கடியால் எம்.பி ஒதுக்கீட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி, அதன் எண்ணிக்கையும் 2011,2012 இல் அதிகரித்தார்.

இருப்பினும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்கும் வரை கல்வி அமைச்சரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. NDA அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் MP ஒதுக்கீட்டின் அளவை ஆறில் இருந்து 10 ஆக உயர்த்தியது. . ஆகஸ்ட் 2021 இல், தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது விருப்ப 450 ஒதுக்கீடுகளை ரத்து செய்தார்.