டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பதில் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. ஏப்ரல் 24 அல்லது அதற்கு முன் பதிலைத் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கினைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 9ந்தேதி நடைபெற்றது. விசாரணையின்போது அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களை படித்த நீதிபதி, கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியது.
இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் கடந்த 10-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மின்னஞ்சல் அனுப்புமாறு கெஜ்ரிவால் வக்கீல் அபிஷேக் சிங்விக்கு அறிவுறுத்தினர். அதன்படி, இ.மெயில்மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கெஜ்ரிவாலின் அப்பீல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட்டு, அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கவே அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மனுவுக்குபதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், நோட்டீசுக்கு வரும் 24ந்தேதி அல்லது அதற்கு முன்பாக பதில் அளிக்க கூறியதுடன், இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 29 முதல் தொடங்கும் என்றும் உத்தரவிட்டுள்ளது.