டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும் என கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம்,  சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பியதுடன், அனைவருக்கும் ஒரே சட்டம்தான் என்று அதிரடியாக தெரிவித்து உள்ளது. இதையடுத்து கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடுகிறது.

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே, டெல்லி ஆம் ஆத்மி அரசின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 21-ந் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். நாட்டிலேயே முதன்முறையாக, ஒரு மாநில முதல்வரே பதவியில் இருக்கும்போது  கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் பல்வேறு வசதிகளுடன் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த கைது விவகாரத்தை  வைத்து அரசியல் செய்யும் ஆம்ஆத்மி கட்சி அமைச்சர் அதிஷி , அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையால், கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சிறையில் வைப்பதன் மூலம் அவரது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சித்து வருபவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்கிடையில்,   அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை  ஏப்ரல் 9ந்தேதி அன்று  நடைபெற்றது. காரசாரமான விசாரணைகளைத் தொடர்ந்து,  பணமோசடி குற்றச்சாட்டில் கது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் அதனை பொருட்படுத்தாமல், அவரை கைது செய்து காவலில் வைத்திருப்பது குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் கூறியதுடன்,  கெஜ்ரிவால் வேண்டுமென்றே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இந்த  வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு, கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது, மேலும், கெஜ்ரிவாலை கைது செய்ய மத்திய அரசிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. டெல்லியில் மதுபான கொள்கை திட்டத்தை உருவாக்கியதில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது

இந்த விவகாரத்தில், ”முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும் காட்ட முடியாது.  சாமானிய மக்களுக்கும், முதலமைச்சருக்கும் ஒரே சட்டம்தான்,  முதலமைச்சருக்கு என தனி சட்டம் கிடையாது. பொது வாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கெஜ்ரிவால் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே தவிர, தேர்தலின்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது. மதுபான கொள்ளை முறைகேட்டில், மற்றவர்களுடன் இணைந்து முறைகேட்டில் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதை காண முடிகிறது.

நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்; அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது; அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன் செல்லாது. கெஜ்ரிவால், மத்தியஅரசு இடையேயான பிரச்னை கிடையாது; ED, கெஜ்ரிவால் இடையேயான சட்ட விவகாரம். தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று கூறியதுடன், சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை நீதிமன்றம் கடைபிடிக்க முடியாது என்று கூறிய நீதிபதி,  அரசியல் காரணங்களை நீதிமன்றத்தின்முன் வாதமாக முன்வைக்க முடியாது என கண்டித்ததுடன்,  இந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவாலுக்கு இடையிலானதே தவிர, மத்திய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் அல்ல அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதனால் கெஜ்ரிவால் கைதை ரத்து செய்ய முடியாது என கூறினார்.