சென்னை:  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,  மக்கள் கூடும் இடங்களை கண்காணியுங்கள் என  மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புடன் ஒமிக்ரான் தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்துள்ளது. அதன்படி 1முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கூட்டம் கூடுவதை தவிர்க்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, தியேட்டர் போன்றவற்றிலும் 50சதவிகித இருக்கை மட்டுமே அனுமதிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், வணிக வளாகங்கள் போன்றவற்றில் ஆய்வு செய்து, மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், விதிகளை மீறுவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் தயங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.