”காவேரி டெல்டா பகுதியில் ஓ என் ஜி சி அமைத்துள்ள குழாய்கள் பாதுகாப்பானதாகக் கூட இருக்கலாம். கதிராமங்கலத்தில் நிகழ்ந்தது எதிர்பாராத விபத்தாகவும் இருக்கக்கூடும்…

கசிவென்ன, பூகம்பத்தைக்கூட தாங்கும் வகையில்தான் குழாய்கள் இருக்கும்…ஆனால் பிரச்சினை கசிவல்ல…இவர்கள் செயல்பாடுகளின் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படும்…

அது குறித்து சரியான நிபுணர்கள் மூலம் ஆய்ந்தறிந்து, விவசாயிகளுடன் கலந்து பேசாமல், எதனையும் செய்வது முறையன்று, ஜனநாயகமன்று,” என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயத்துறை வல்லுநர் ஒருவர்.

அவர் ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் பல்வேறு பன்னாட்டு அமைப்புக்களின் விவசாயம் தொடர்பான பணிகளில் பணியாற்றி வருபவர். குறிப்பாக நீர் மேலாண்மை குறித்தும், எவ்வித விவசாயம் நீண்ட காலம் பயனுடையதாய் இருக்கும் என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்பவர்.

கர்நாடகா-தமிழக தாவாவினால் டெல்டா விவசாயம் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகிவரும் வேளையில், என்ன பயிரிட்டால் விவசாயிகள் தப்பித்துக்கொள்ளமுடியும் என்பது பற்றிய சில பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருபவர்.

கதிராமங்கலம், நெடுவாசல், மற்றும் நரிமணம் பகுதிகளில் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் சந்தித்த பின், இந்த வல்லுநரிடம் என்ன நடக்கிறது அங்கே, மற்ற நாடுகளிலும் இதே கதைதானா எனக் கேட்டபோது, அவர் கூறினார்:

“எனக்கு மிக வேதனையாகத்தான் இருக்கிறது. நாட்டுக்கு இயற்கை எரிவாயு அவசியம், பெட்ரோல் வேண்டும், இல்லை எனச் சொல்ல முடியாது…எவ்வித வளர்ச்சிப் பணியிலும் சுற்றுச் சூழல் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படத்தான் செய்யும்…

ஆனால் எவ்வளவு இழப்பு, எவ்வளவு பயன் என்பதைத் தீர ஆய்ந்து, பகிரங்கமாக விவாதித்து, அதன் பிறகே எந்த முடிவையும் எடுக்கவேண்டும்… நம் நாட்டிலோ அப்படிச் செய்யப்படுவதே இல்லை..”

தவிரவும் இப்படி எரிவாயு தோண்டி எடுக்க, குழாய்கள் வழியே எடுத்துச் செல்ல பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

ஏன் அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட கோதாவரி படுகையில் எண்ணெய் எடுக்கின்றனர், ஆனால் அங்கே குடியிருப்புக்கள் இல்லை.

இங்கோ வளமான காவிரி டெல்டாவில் கை வைத்தி ருக்கின்றனர். ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கும் அப்பகுதி விவசாயிகளுக்கு இந்த எண்ணெய் எடுக்கும் பணி மேலும் ஒரு பின்னடைவு, என்றார் அவர் திட்டவட்டமாக.

”குழாய் கசிவு ஆபத்து சாத்தியம் என நான் நினைக்கவில்லை, ஆனால் நிச்சயமாக எண்ணெய்க்காக தோண்டும்போது பெருமளவு நன்நீரும் வெளியேற்றப்படுகிறது.

இதனால் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் நாளடைவில் வீழ்ச்சியடையக்கூடும். மேலும் கடற்கரை அருகே அமைந்துள்ள பகுதிகள் என்றால், உப்புத் தண்ணீரும் நிலத்தடி நீருடன் கலந்துவிடும். போதாக்குறைக்கு பூமியே தாழ்ந்துவிடவும் கூடும்.

இத்தனை ஆபத்துக்கள் அடங்கிய திட்டங்களை நிறைவேற்றித்தான் தீரவேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த நிபுணர்.

நெடுவாசல், நரிமணம், கதிராமங்கலம் மூன்று இடங்களிலுமே மக்கள் மிகவும் கவலை யடைந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் 4 ,5 ஆண்டு காலமாக மழையே இல்லை, எண்ணெய் எடுக்கும் பணியின் காரணமாக சுத்தமாகவே சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது, விவசாயம் முடிந்துவிட்டது என்றனர் பலர்.  கொஞ்சம் மிகைதான், ஆனால் இப்படிச் சொல்வது ஆர்வலர்கள் மட்டுமல்ல, எல்லோரையும் அச்சம் ஆட்டிப் படைக்கிறது என்பது உண்மை.

நெடுவாசலில் குமாரசாமி என்பவர் தன் நிலத்தில் ஓ என் ஜி சி சோதனை முயற்சிகளை மேற்கொள்ள அனுமதித்திருக்கிறார். ஒரு பகுதியில் சோளம் விளைந்திருந்தது. அதை ஒட்டிய இன்னொரு பகுதி கட்டாந்தரையாக காணப்பட்டது. அங்கே கரும்பு விளைவித்து வந்ததாகவும், பல அடி ஆழத்திற்குத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்திவிட்டதால் இனி அங்கே எதுவும் விளைவிக்க முடியாதெனவும் கூறினார்.

அவருக்கு ஏதோ ஒரு கணக்குப் போட்டு நஷ்ட ஈடு கொடுத்து வருகின்றனர், ஆனால் ஹைட்ரோ கார்பன் பணியினால் சுத்தமாகவே நிலங்கள் நாசமாகிவிடுமோ என்ற அச்சம் பரவலாக அங்கே நிலவுகிறது.

சோதனைத் தோண்டுதலிலிருந்து வெளியேறிய கழிவுகள் அவரது நிலத்தில் ஒரு தொட்டியில் அப்படியே இன்னமும் தேங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, நாள்தோறும் அத்தொட்டியைப் பார்க்கும்போது அவருக்கு எவ்வளவு பதைபதைப்பாக இருக்கும்? அது எப்படி வந்தது, எப்படி வெளியேற்றுவது/சுத்திகரிப்பது என யாரும் அவரிடம் எதுவும் சொல்லவில்லை.

அந்தக் கழிவு அருகாமையில் உள்ள நிலத்தடி நீரையும் பாதிக்காது என்பதற்கு எந்த உத்திரவாத முமில்லை.

மீதேன் வாயு எடுப்பது மிகப் பெரிய ஆபத்து நீராதாரங்களுக்கென விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேல் நாடுகளிலேயே கடும் எதிர்ப்பிருக்கிறது. அதையும் இங்கே செய்ய முயன்று படுதோல்வி அடைந்து பின்வாங்க நேர்ந்தது அரசு.

அதே நிலைதான் நெடுவாசலிலும் ஏற்படும். மக்கள் கொதித்துப் போயிருக்கின்றனர். கட்சி சார்பற்ற இளைஞர்கள் தலைமையில் நடக்கிறது போராட்டம் அங்கே தீவிரமாக நடந்துவருகிறது.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டே அரசு சகட்டு மேனிக்கு கைது செய்கிறது, ஜாமீன் மறுக்கிறது, போலீசாரை அங்கே நிறுத்தி மிரட்டப்பார்க்கிறது. அப்பகுதியைப் பொறுத்தவரை எப்பணியும் நிற்கும் எனத் தோன்றவில்லை. இன்றுவரை எண்ணெய் எடுத்து அனுப்பிக்கொண்டுதானே இருக்கின்றனர்?

நான் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவிரும்பியது தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தின் எதிர்காலம் என்ன என்பதைத்தான்.

கர்நாடக பிடிவாதம், வருண பகவானின் இரக்கமின்மை, ஓ என் ஜி சி போன்ற நிறுவனங்களின் திருவிளையாடல்கள் – இதெல்லாம் போக என்ன எஞ்சி நிற்கும்?

நான் முதலில் மேற்கோள் காட்டிய விவசாய வல்லுநர், “அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். சராசரி மழை 956 மில்லி மீட்டர். மிகக் குறைவு எனக் கருதப்படும் காலத்தில் கூட 600 மி.மீ பெய்கிறது. 55 மி.மீ இருக்கும் பகுதிகளிலேயே நாங்கள் பல்வேறு சோதனைகள் செய்து வருகிறோம். முன்னேற்றமும் இருக்கிறது. எனவே எச் சூழலிலும் நெற்களஞ்சியம் தூர்ந்துவிடப்போவதில்லை. கவலை வேண்டாம்…ஆனால் ஆட்சியாளர்கள் அணுகுமுறை திருப்திகரமாகவே இல்லை…மாற்றுப் பயிருக்கோ அல்லது எண்ணெய் எடுப்பதால் ஏற்படக்கூடிய பாரதூரவிளைவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கோ எவ்வித நடவடிக்கையும் இல்லை,” என்கிறார்.

இவ்வாறாக மீண்டும் அங்கு வந்து முடிகிறது பிரச்சினை. பொறுப்பான, மக்கள் நலனில் அக்கறை உள்ள, அரசு…ஆனால் அப்படி ஒன்று என்று உருவாகும்?

நோயாளிகளி எதிர்காலத்தை கணிக்க மருத்துவமனைகளிலேயே மத்திய பிரதேச அரசு ஜோசியர்களை நியமிக்க இருக்கிறதாம். அவர்களிடம்தான் கேட்கவேண்டும்