ஸ்ரீநகர்:

கத்துவா பகுதியில் நடந்த சிறுமி பலாத்காரம் ஒரு சாதாரண நிகழ்வு என்று கூறி, காஷ்மீர் மாநில புதிய துணை முதல்வர் பதவி ஏற்ற அன்றே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா பகுதியில்  8 வயது சிறுமி,  வெறியர்களால் கோயிலில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   இதையடுத்து பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை என்னும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

காஷ்மீரில் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் இரு பாஜக அமைச்சர்கள் பதவி விலகினார்கள். புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா பதவி ஏற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற உடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “கத்துவா பலாத்கார நிகழ்வு ஒரு சாதாரண சம்பவம் தான். அது தேவை இல்லாமல் பெரிதாக்கப்பட்டு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இது போன்ற ஒரு மிகச் சாதாரண நிகழ்வுக்காக மாநில அமைச்சர்கள் பதவி விலகியது தேவையில்லாதது” என்று கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.