டில்லி:
 
காஷ்மீரில் அமைதி நிலவ யாருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக  உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்  அறிவித்து உள்ளார்.
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த, அனைத்துக்கட்சி எம்.பிக்களின் குழு கடந்த 2 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ளது.  அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரை குழுவினர் சந்தித்து பேசினார்கள். நேற்றும் 2-வது நாளாக  பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
அமைதி குழுவின் ஒருசிலர் தனியாக சென்று ஹஹுரியத் மாநாடு கட்சி தலைவர்களை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
rajnath
இதுகுறித்து ராஜ்நாத்சிங் கூறியதாவது:
காஷ்மீரில் நிலவிவரும் வன்முறை காரணமாக ஒட்டுமொத்த நாடும், பாராளுமன்றமும் கவலை கொண்டுள்ளது. இதனால் தான் 20 கட்சிகளை சேர்ந்த 26 எம்.பி.க்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்துள்ளது. குழு உறுப்பினர்கள் இந்த சமூகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30 பிரதிநிதிகள், 300 அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
குழு உறுப்பினர்கள் சிலர் ஹுரியத் தலைவர்களை சென்று சந்திக்க முயன்றது குறித்து ஒரு விளக்கத்தை கூற விரும்புகிறேன். அவர்களுடன் பேசுவதற்கு நாங்கள் சரி என்றோ, வேண்டாம் என்றோ கூறவில்லை. என்ன நடந்தது என்பது பற்றி உங்களுக்கு தெரியும். இதற்கு மேல் இதுபற்றி நான் விளக்க விரும்பவில்லை.
ஆனால் திரும்பிவந்த அந்த நண்பர்கள் கூறிய தகவலின்படி, அவர்களின் (பிரிவினைவாத தலைவர்கள்) நிலை காஷ்மீருக்காகவோ, மனிதாபிமான அடிப்படையிலோ போராடுவதாக தெரியவில்லை. சிலர் பேச முயன்றபோது அவர்கள் அதை மறுத்துவிட்டனர். எனவே இது ஜனநாயக அடிப்படையும் இல்லை.
ஜம்மு காஷ்மீர் முன்பும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான். காஷ்மீரில் நிலவும் வன்முறை தொடர்பாக பாகிஸ்தானுடன் பேசுவீர்களா? என்கிறீர்கள். முதலில் நாம் இந்தியர்களுடன் பேசுவோம்.
அனைவருமே காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த மாநிலத்தில் அமைதி திரும்பும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கையை விரும்பும் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க முயன்றவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியும் ஒருவர். அவர் கூறும் போது, அவர்கள் குழுவினருடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, சில எம்.பி.க்கள் பிரிவினைவாதிகளை சந்திக்க முயன்றது அவர்களது தனிப்பட்ட முடிவு. அரசின் முடிவோ அல்லது குழுவின் முடிவோ அல்ல என்றார்.

59-வது நாளாக நேற்றும் காஷ்மீரில் 7 போலீஸ் நிலைய எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பிரச்சினைக்குரிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை அரங்குக்கு வந்தபோது அங்கு கூடியிருந்த பஜ்ரங்தள் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியை சந்திக்க முயற்சிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
ஹுரியத் மாநாடு, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற பிரிவினைவாத இயக்கங்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களை சந்திக்க மறுத்துவிட்டன. அந்த அமைப்புகள், தங்கள் உரிமையை நிலைநாட்ட போராட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பாக தங்கள் பகுதிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி கூட்டம் நடத்துவதற்காக குல்காம், பல்போரா, லோலாப் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானோர் திரண்டனர். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதில் பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.