கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த எட்டாம் தேதி இந்த கோயிலுக்குள் ஒரு சமூகத்தினரை அனுமதிக்க மறுத்ததால் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் முன்னிலையில் இருசமூகத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் குளித்தலை ஆர்டிஓ தலைமையில் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இதில் இருதரப்பினருக்கும் சுமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து இன்று மீண்டும் கோயில் திறக்கப்பட்டது.

வீரணம்பட்டி காளியம்மன் கோவிலை திறக்க கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் வருகை தந்தனர்.

கோயிலில் அபிஷேகம் செய்ய ஒருதரப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மற்றொரு தரப்பு அமைதியாக சாமி தரிசனம் செய்தனர், மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் அவர்கள் தரப்பில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கோவிலுக்குள்ளே வருகை புரிந்தார்.

சீல் வைக்கப்பட்ட கோயில் திறப்பு காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர், வஜ்ரா உள்ளிட்ட வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இருந்தபோதும் எந்த வித பிரச்சனையும் இன்றி கோயில் திறக்கப்பட்டு இருதரப்பினரும் அமைதியாக சாமி தரிசனம் செய்தனர்.