சேலம்:
சேலம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். அவருக்கு சேலம் மாநகரில் நேற்று மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு, 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.