சென்னை: கடலுக்கு நடுவில் அமைய உள்ள மறைந்த கருணாநிதி பேனா சின்னம் அமைக்க மத்தியஅரசிடம் அனுமதி கோரி தமிழகஅரசு விண்ணப்பம் செய்துள்ளது. திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA) மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) மத்திய அரசிடம் கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் கடலில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.  கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க ரூ.80 கோடிகளை ஒதுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்த பேனா சிலையானது கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரை, 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை  கடலுக்கு நடுவில் அமைய உள்ள கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி (TNSCZMA) பரிந்துரையை சுட்டிக்காட்டி,  பேனா நினைவுச் சின்னத்திற்கு CRZ அனுமதி கோரும் நடைமுறைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.

திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA) மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) ஒன்றிய அரசிடம் கோரி விண்ணப்பித்துள்ளது.