தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

வருவாய், சமூக நலன், மகளிர் உரிமை உள்ளிட்ட 22 துறைகள் வழங்கும் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட 170 க்கும் மேற்பட்ட சேவைகளை இந்த இ-சேவை மையங்கள் வழங்கிவருகின்றன.

ஆண்டுக்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் இ-சேவை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் அரசு துறையின் 194 சேவைகளை ஒருங்கிணைத்து இ-சேவை 2.0 அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் செயல்பட்டு வந்த இ-சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதற்கு குறைவான பயன்பாடு காரணமாக கூறப்படுகிறது.

அதே வேளையில் இ-சேவை மூடப்பட்ட வார்டுகளில் பயனர்கள் மண்டல இ-சேவை மையங்களை தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தவிர, அதிக பயன்பாடு மற்றும் புதிய சேவை அறிமுகம் காரணமாக குறைந்த அளவே உள்ள இந்த இ-சேவை மையங்களும் சர்வர்கள் சரியாக இயங்காததால் பாதி நேரம் வேலை செய்வதில்லை.

இதனால் பல்வேறு சேவைகளுக்காக இ-சேவை மையங்களை நாடிச் செல்லும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.