சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி  நடைபெற்ற விழாவில், 309 மாணவிகளுக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்  ‘லேப்டாப்’ வழங்கினார்.

சென்னை மறைந்த முன்னாள் முதல்மைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தள் மாநிலம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘வேருக்கு விழா’ என்ற பெயரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாணாக்கர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ‘வேருக்கு விழா’ என்ற பெயரில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை  துறைமுகம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில், 271 பெண்களுக்கு தையல் எந்திரங்களையும், 309 மாணவிகளுக்கு லேப்டாப்களையும், 450 மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார். மேலும், சமீபத்தில் காலமான தி.மு.க.வினர் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, மத்தியசென்னை தொகுதி எம்.பி. தயாநிதிமாறன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “சென்னை (கிழக்கு) மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் ‘கருணாநிதி 99-வேருக்கு விழா’ நிகழ்வில் இன்று (நேற்று) துறைமுகத்தில் 271 மகளிருக்கு தையல் எந்திரம், 309 மாணவிகளுக்கு லேப்டாப், 450 பேருக்கு கல்வி உதவித்தொகை, மறைந்த கழகத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினோம்” என்று தெரிவித்து உள்ளார்.