மதுரை:

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் இன்று காலை கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.

ஆறுமுகத்தின் அறுபடை வீடுககளில் தீபத்திருவிழாவையொட்டி 10 நாட்கள் விழா நடப்பது வழக்கம். ஆறுமுகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்,  தீபத்திரு விழாவை யொட்டி, இன்று அங்குள்ள கொடி மரத்தில், பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் முருகன், தெய்வானை, பால், பன்னீர், பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் முன்னிலையில் விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து கார்த்திகை தீபம் டிசம்பர் 10ஆம் தேதி காலையில் முருகன் தெய்வானை எழுந்தருள தேரோட்டம் நடைபெறும், மாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்படும்.

முன்னதாக நேற்று  திருப்பரங்குன்றம் கோவில் அலுவலகத்தில் 3 அடி உயரம் தாமிர கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மலைமீது மகா தீபம் ஏற்ற கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.