சென்னை,
விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கார்த்தி சிதம்பரத்தை இந்த மாதம் 28ந்தேதிவரை, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது, நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்தது என்பது சிபிஐ புகார் கூறியது.
இந்த விவகாரத்தில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ90 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதையடுத்து இன்று சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதுவரை சிபிஐ முன்பு ஆஜராவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.