சென்னை :

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தேச கால அட்டவணையை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பான உத்தேச காலஅட்டவணையை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் மாநில தேர்தல்ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இதனையடுத்து உத்தேச அட்டவணை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறி வழக்கு விசாரணையை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.