
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 6 வருடங்களாக திறக்கப்படாமல் துணியில் சுற்றி மூடி வைக்கப்பட்டுள்ளது.
நடிப்புக்கு இலக்கணம், நடிகர் திகலம் என்றெல்லாம் போற்றப்படும் சிவாஜி கணேசன்,. ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழ் எய்தினார்.
வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட போராளிகளை நம் கண்முன் நிறுத்தினார். கர்ணன் போன்ற புராண பாத்திரங்களாகவே திரையில் வாழ்ந்துகாட்டினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். மிக உயரிய விருதான செவாலி, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
அவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. காரணம், தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கினார். பிறகு திரையுலகில் நுழைந்து பல சாதனைகளைப் படைத்தார்.

2011-ல் தி.மு.க. ஆட்சியின் போது, திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி, சிலை துணியால் மூடப்பட்டது.
அடுத்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வர் ஆனார்.
ஆனாலும் சிவாஜி சிலை திறப்பு கிடப்பில் போடப்பட்டது.
இந்த சிலையை திறக்க வேண்டுமென வேண்டுமென திருச்சி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அரசு எந்தவொரு நடவடிக்கைகையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே. சந்திரசேகரன் நமது patrikai.com இதழிடம் தெரிவித்தாவது:
“ உலகப் புகழ் பெற்ற சிவாஜி கணேசனின் சிலை சென்னையில் கடற்கரைச் சாலைியல் வைக்கப்பட்டுள்ளது. அதை அங்கிருந்து அகற்றும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து, கடற்கரையிலேயே சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என்று சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.
இன்னொரு புறம், திருச்சியிலோ, சிவாஜி சிலை அமைக்கப்பட்ட திறக்கப்படவே இல்லை.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டோம். சிலையை நிறுவ மட்டும் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பதில் வந்தது. சிலை நிறுவுவதே திறப்பதற்காககத்தானே!
கேட்டால், மாவட்ட ஆட்சியர் வழியாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
இருக்கும் சிலையை அகற்ற நினைப்பதும், நிறுவிய சிலையை திறக்காமல் வைத்திருப்பதும் அந்த மாபெரும் கலைஞனுக்கு இழுக்கல்ல… ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார் கே.சந்திரசேகரன்.
மறைந்த மாபெரும் கலைஞனின் 16வது நினைவு தினம் இன்று.