கர்நாடக மாநிலத்தை ஆளும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு கடந்த சில தினங்களாக சோதனை மேல் சோதனை ஏற்பட்டுவருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன் பிட்காயின் பரிவர்த்தனையில் கோடிக்கணக்கில் சுருட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபருக்கும் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொண்டு வருவதாக கையை உயர்த்தினார் முதல்வர் பசவராஜ் பொம்மை.

இதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் 40 சதவீதம் வரை அரசு ஒப்பந்தங்களுக்கு கமிஷன் கேட்பதாக கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா குற்றம் சாட்டியிருக்கிறார்.

2018 ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு 10 சதவீத கமிஷன் அரசு என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், தற்போதுள்ள பா.ஜ.க. அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மந்திரிகள் 5%, மக்களவை உறுப்பினர்கள் 2% ஒன்றிய அளவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு கட்டிடம் கட்ட 5 % ரோடு போட 10% என்று அவரவர் நிலை, தகுதி மற்றும் அதிகாரத்திற்கு ஏற்ப கமிஷன் பெறுகின்றனர்.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்க்கே இந்த நிலை என்ற நிலையில், செய்து முடிக்கப்பட்ட பணிக்கான பணத்தை வாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டியுள்ளது.

இப்படி ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் சுமார் 35 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்க வேண்டிய நிலையுள்ளதால் ஒப்பந்ததாரர்கள் பலரும் அரசு பணி ஒப்பந்தம் மேற்கொள்ள தயங்குகின்றனர் என்று தி பிரிண்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கெம்பண்ணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடியூரப்பா முதல்வராக இருக்கும் போதே கடந்த ஜூலை மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், இதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் பிரதமருக்கு அனுப்பிய இந்த கடிதம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானதால் கர்நாடக எதிர்க்கட்சிகள் பசவராஜ் பொம்மை மீது கடுமையாக விமர்சித்து வருகின்றன.

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் ஊழல் நிறைந்த பா.ஜ.க. ஆட்சி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மையை உடனடியாக பதவி நீக்கம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.