பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள்,  ஊக்கத்தொகைகள் வழங்க வேண்டும், கொரோனா முன்களப்பணியில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் வழங்குவதை போல போக்குவரத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன கர்நாடகா போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளாகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம், கர்நாடகா போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு கர்நாடக போக்குவரத்துக் கழகம் மற்றும் வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து முடங்கி உள்ளது. இந் நிலையில், துணை முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் முதல்வர் எடியூரப்பா உறுதி அளித்திருந்தார். எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், வழக்கம் போல் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் கர்நாடக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.