கர்நாடகாவில் உள்ள மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 சதவீதம் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி தொகையைத் தான் தருகிறார்கள் என்று திங்களேஸ்வர் மடத்தின் மடாதிபதி கூறியுள்ளார்.

அரசு காண்ட்ராக்டுகளுக்கு 40 சதவீதம் கமிஷன் தரவேண்டி உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் காண்ட்ராக்டர் சந்தோஷ் பாடீல் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மடாதிபதி ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் “மதத்தின் பெயரால் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.”

“இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு கடவுள் சேவைக்கு வழங்கும் தொகையில் கமிஷன் அடிப்பது மதத்தின் புனிதத் தண்மையைக் கேள்விக்குரியதாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்த அரசு ஆட்சியில் நீடிக்க தகுதியற்ற அரசு” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

காண்ட்ராக்டர் சந்தோஷ் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா ராஜினாமா செய்த நிலையில் அவர் மீதான விசாரணை விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதியான திங்களேஸ்வர் ஸ்வாமிகளின் இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.