அமைச்சர் நாகேஷ் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு! எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கம்… சர்ச்சை…

Must read

பெங்களூரு: கர்நாடக மாநில கலால்துறை அமைச்சர் நாகேஷ் பதவி விலக மாநில பாஜக தலைமையால் உத்தரவிடப்படட நிலையில் அவர்  தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். இதனால், அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது,  அங்கு மாநில முதல்வராக  குமாரசாமி  இருந்து வந்தார். ஆனால், ஆட்சியை கலைப்பதற்காக, கூட்டணியில் உள்ள இரு கட்சிகளை சேர்ந்த சில எம்எல்ஏக்களையும், பாஜக விலைக்கு வாங்கியது. அதனால்,  13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததுடன் அமைச்சர் ஒருவரும் தனது பதவியை  ராஜினாமா செய்து அதிர்ச்சி அளித்தார். அதைத் தொடர்ந்து குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து நடைபெற்று வருகிறது.
எடியூரப்பாவின் மந்திரி சபையில் 7 இடங்கள் காலியாக இருந்து வந்தன.  மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்வர் எடியூரப்பா முயற்சி மேற்கொண்டு வந்தார்.  ஆனால், இதுவரை சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை தற்போது அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி சென்ற முதல்வர்  அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து  பெங்களூரு திரும்பிய எடியூரப்பா கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வருகிற 13-ந் தேதி  மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.
இதையடுத்து  7 புதிய மந்திரிகள் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. மந்திரி பதவிகளை கைப்பற்ற பலர் போட்டி வந்தனர். இந்த நிலையில், அங்கு சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, எஸ்.அங்கார், பூர்ணிமா சீனிவாஸ், அரவிந்த் லிம்பாவளி, முனிரத்னா, எம்.எல்.சி.க்கள் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மந்திரிசபையில் உள்ளவர்களில் 3 பேரை நீக்கிவிட்டு மேலும் 3 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் எடியூரப்பா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி தற்போது மந்திரியாக உள்ள கர்நாடக கலால்துறை அமைச்சர் நாகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்திப்பட்டு வருகிறது. ஆனால், அவர் ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். இதனால், அங்கு மந்திரி சபை விரிவாக்கம் செய்வதில்  பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நாகேஷ் ஜூலை 2019 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவுக்கு சென்றார். அதனால், அவருக்கு எடியூரப்பா மந்திரி சபையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அவரை பதவி விலக பாஜக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. அதை அமைச்சர் நாகேஷ் ஏற்க மறுத்து வருகிறார். பாஜக தனக்கு  துரோகம் இழைத்துவிட்டது என்று  குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் நாகேஷ்  ராஜினாமா செய்ய மறுப்பதால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் பரவி வருகின்றன. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக எம்எல்சி ஏ.எச். விஸ்வநாத்தும், எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.
எடியுரப்பா மீது “நன்றியற்றவர்” என்று கூறி உள்ளார். புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.  அமைச்சரவை விரிவாக்கத்திற்கான தேர்வுகளை எதிர்த்தார்.
இன்று நடைபெறும் மந்திரிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

More articles

Latest article