பெங்களூரு

காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  அகில இந்திய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஐந்தாம் இடத்தில் இருந்த கர்நாடக மாநிலம் தற்போது நான்காம் இடத்துக்கு வந்துள்ளது.   இங்கு சுமார் 1.4 லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்குத் தொற்று உறுதி ஆகி அவர் பெங்களூரு நகரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   அவருடைய மகள் பத்மாவதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி ஆகி உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர், மற்றும் முன்னாள் முதல்வரான சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மூத்த காங்கிரஸ் தலைவரான சித்தராமையா இதைத் தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.