கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் (வட்டத்திற்குள் சிக்கியிருப்பவர்)

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளர் சங்கர், பாரதிய ஜனதா கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக முதல் விக்கெட்டை பாரதியஜனதா கைப்பற்றி உள்ளது.

கடந்த 12-ந் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.  2 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.  முல்பாகல் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும், கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளர் சங்கர் மற்றொருவரும் ஆவார்கள்.

இந்நிலையில், இன்று பாஜ சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பா, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க கால அவகாசம் கோரி கடிதம் கொடுக்க சென்றிருந்தார்.

அப்போது, காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றிபெற்ற கேபிஜெபி கட்சி சுயேச்சை  எம்எல்ஏவான சங்கர் உடன் சென்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பாரதியஜனதா கட்சியின் குதிரை பேரத்துக்கு அத்தாட்சி என்றும், முதல் சுயேச்சை விக்கெட்டை பாஜ கைப்பற்றி உள்ளதாகவும் விமர்சனம் செய்யப்படுகிறது.

தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழக்க ரூ.100 கோடி பேரம் பேசி வருவதாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில், அதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல காங்.ஆதரவு சுயேச்சை பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார்.