மைசூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் செயல் தலைவருமான ஆர். துருவநாராயணன் மாரடைப்பால்  காலமானார். அவரது மறைவுக்கு  ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் உள்பட தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஆர். துருவநாராயணனுக்கு, அவரது மைசூரு இல்லத்தில்  இன்று காலை 6.40 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை   மைசூருவில் உள்ள டிஆர்எம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர் மஞ்சுநாத் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

துருவநாராயணன்  மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் உள்பட மாநில மற்றும் தேசிய  தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துருவநாராயணின் மறைவு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு என்று  ராகுல் காந்தி, டிவிட் மூலம் இரங்கல் தெரிவித்து உள்ளார்.   “முன்னாள் எம்.பி., ஸ்ரீ ஆர்.துருவநாராயணனின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. கடின உழைப்பாளி மற்றும் தாழ்மையான அடிமட்டத் தலைவர், அவர் சமூக நீதியின் பாடுபட்டவர், NSUI மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஆகிய தரவரிசைகளில் உயர்ந்தார். அவரது மறைவு. காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் எம்.பி துருவனராயனின் திடீர் மரணம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடினமான முடிவுகளை எடுக்கும்போது துருவநாராயணன் சிறந்த ஆலோசனைகளை வழங்கியவர். “அவரது ஆளுமை எப்போதும் மகிழ்ச்சி யாகவே இருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவர் ராமநகரில் நடைபெறவிருந்த பிரஜாத்வனி யாத்திரையை சிவக்குமார் ரத்து செய்துவிட்டு, துருவநாராயணின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மைசூரு புறப்பட்டுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி சார்பில்,  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யும், கட்சியின் செயல் தலைவருமான துருவநாராயணன் சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார். இது காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தி யடையட்டும். அவரது இழப்பை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தலைவரும், முன்னாள் எம்.பி.யும், எனது அன்பு நண்பருமான ஆர்.துருவநாராயணனின் அகால மறைவால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எங்களோடு எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் நமது நண்பர், தலைவர் மற்றும் காங்கிரல் கட்சியின் தீவிர விசுவாசியான துருவநாராயணனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.” தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றதிற்காக பாடுபட்டவர், தனது வாழ்க்கையை ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர் துருவநாராயணன் என்று  கூறியுள்ளார்.